பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 28 ஆகஸ்ட், 2024

எட்டாம் வகுப்பு|இயல் மூன்று|தமிழர் மருத்துவம்|மதிப்பீடு|வினா விடைகள்

தமிழர் மருத்துவம்

வினா விடைகள்  எட்டாம் வகுப்பு 




  

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ……………… பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை

அ) தாவரங்களை


2.தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………………. நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்

இ) உணவின்



3.உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ………….
அ) தலைவலி
ஆ) காய்ச்சல்
இ) புற்றுநோய்
ஈ) இரத்தக்கொதிப்பு
Answer:
ஈ) இரத்தக்கொதிப்பு

Question 4.
சமையலறையில் செலவிடும் நேரம் ………… செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வாழ்வுக்காக
ஈ) உணவுக்காக

இ) நல்வாழ்வுக்காக

குறுவினா


1.மருத்துவம் எப்போது தொடங்கியது?

மருத்துவத்தின் தொடக்கம் :
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.


2.நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை :
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.

எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.


3.தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

வேர், தழை போன்ற தாவர உறுப்புகளும் தாதுப் பொருட்களும் உலோகமும் தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவனவாகும்.

சிறுவினா


1.நோய்கள் பெருகக் காரணம் என்ன?

நோய்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் :
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.


சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ண மும் மனஅழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும்.

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக

அறிவியல்  அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.


2.பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் :
(i) நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

(ii) சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

(iii) விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

(iv) எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(v) கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

(vi) இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

(vii) உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடுவினா


1.தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக

மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை :
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்த விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர். அத்தகைய மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை மூலம் அறியலாம்.

தொடக்கக் காலத்தில் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். தமிழர் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.

மருத்துவ முறைகள் :
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் மருத்துவமுறைகள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்துள்ளது.

தமிழர் மருத்துவம் பின்தங்கியதும் மறுமலர்ச்சி அடைந்ததும் :
ஆங்கிலேயரின் வருகையால் நவீன மருத்துவம் தலை தூக்கியது. இம்மருத்துவம் துரிதமாகச் சில நோய்களைத் தீர்த்தன. அதனால் தமிழர் மருத்துவம் பின்தங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய நோய்களுக்குத் தீர்வு காண இரசாயன மருந்துகள் போதாது என்றும், இதனுடன் உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தனர். மேலும் இம்மருத்துவமுறை பக்கவிளைவுகள் அற்றது என்பதாலும் மறுமலர்ச்சி அடைந்தது.

சித்த மருத்துவ மருந்துப் பொருள்கள் :
வேர், தழையால் குணமாகாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர். மேலும் ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். நோயாளியின் வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப் போக்கு மரபுவழி எப்படிப்பட்டது என்பனவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளித்தது தமிழர் மருத்துவம்.

மருத்துவத்தில் பக்க விளைவுகள் :
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவில், எந்தத் துணை மருந்துடன் கொடுத்தால் பக்க விளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர்.

தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :
தனித்துவமான பார்வை தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு. சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

முடிவுரை :
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கும் தமிழ்மருத்துவமுறையை நாமும் பின்பற்றி நோயின்றி வாழலாம்.